நவீன சலவையக கட்டுமான பணிகள்; 90 சதவீதம் நிறைவு
கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில், 2.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சலவை கட்டட பணிகள், 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என சுமார், 3000 படுக்கைகள் உள்ளன. இங்கு பயன்படுத்தப்படும், நோயாளிகள் பயன்படுத்திய மெத்தை விரிப்பு, தலையனை உறை அனைத்தும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீராவி சலவையகத்தில் சலவை செய்யப்படுகிறது. தற்போதுள்ள நீராவி சலவை அமைப்பு, 1990ல் ஏற்படுத்தப்பட்டது என்பதால், பயன்பாட்டில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதை தொடர்ந்து, கடந்த, 2024 மார்ச் மாதம் புதிய கட்டடம் நவீன முறையில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமான பணிகள் குறித்து, பொதுப்பணித்துறை பொறியாளர் கூறுகையில், 'அனைத்து நவீன வசதிகளுடன், தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் 6,950 சதுர அடியில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களுக்காக காத்திருந்தோம்; தற்போது இயந்திரங்களும் வந்துள்ளன. 'அவுட்டர் லைன்' கொடுத்து, தண்ணீர் இணைப்பு சார்ந்த பணி மட்டும் நிலுவையில் உள்ளது. 90 சதவீத பணிகள் முடிவு பெற்றுவிட்டன; ஒரு வாரத்தில் பணிகள் முழுமையாக முடிந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும், ' என்றார்.