சிறுமுகையில் குரங்குகள் தொல்லை; மக்கள் அச்சம்
மேட்டுப்பாளையம்; சிறுமுகை பேரூராட்சி வ.உ.சி., வீதிகளில், நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. கதவை திறந்து வைத்தால், குரங்குகள் வீடுகளில் புகுந்து உணவுப் பொருட்களை சாப்பிட்டும், சேதம் செய்தும் வருகின்றன. விரட்டும் மக்களை கடிக்கவும் வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வ.உ.சி., நகர் மக்கள் கூறியதாவது: இப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடும் காம்பவுண்ட் சுவருடன் உள்ளது. அதனால் குழந்தைகளை வெளியே விளையாட விடுகின்றனர். குழந்தைகள் கையில் தின்பண்டங்களை வைத்திருந்தால், அதை குரங்குகள் பிடுங்கி சாப்பிடுகின்றன. பெரியவர்கள் குரங்குகளை விரட்டும் போது கடிக்கவும் வருகிறது. குழந்தைகளைக் கடித்து விடுமோ என்ற அச்சம்,பெற்றோரிடம் எழுந்துள்ளது. எனவே இப்பகுதியில் சுற்றும் குரங்குகளை, சிறுமுகை வனத்துறையினர், பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.