மகன் இறந்த செய்தி கேட்டு தாயும் உயிரிழந்த சோகம்
திருப்பூர்: திருப்பூர் அருகே மகன் இறந்ததை அறிந்த தாயும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம், நல்லிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 53. குளத்துபாளையம் பேரூராட்சியில் துாய்மை பணி மேற்பார்வையாளர். இவரது மனைவி பாலாமணி, 52, மகன் ரவிசந்திரன், 32, மகள் சங்கீதா, 34 ஆகியோர். பெரியசாமி, குறைந்த ரத்தழுத்தம் தொடர்பாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மாத்திரை எடுத்து வருகிறார். நேற்று காலை பணிக்கு செல்ல பெரியசாமி சென்ற போது, மயங்கி கீழே விழுந்தார். உடனே, மகன் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பரிசோதனை செய்த மருத்துவர், அவர் இறந்ததாக கூறினார். இதனையறிந்து மருத்துவமனைக்கு சென்ற பெரியசாமியின் தாயார் ஆரம்மாள், 70, மகன் இறந்த செய்தி கேட்டு, மருத்துவமனை வளாகத்தில் மயங்கி விழுந்தார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூதாட்டி இறந்து விட்டதாக கூறினர். மகன் இறந்தது குறித்து அறிந்து, தாயும் உயிர் விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.