நடைபாதை கடைகளுக்கு நகராட்சி கமிஷனர் அறிவுரை
வால்பாறை; பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், நடைபாதை கடைகளை வைக்க வேண்டும் என, நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.வால்பாறை நகரில், நகராட்சி அலுவலகம் முதல் ஸ்டேன்மோர் சந்திப்பு வரை சாலையோரத்தின் இருபுறமும் ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் வைத்துள்ளனர். இதனால், நடைபாதையை பயன்படுத்த முடியாமல் மக்கள் நாள் தோறும் தவிக்கின்றனர்.இந்நிலையில், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் கமிஷனர்(பொ) கணேசன், துப்புரவு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் பேசிய நகராட்சி கமிஷனர், வால்பாறை நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாவாறு, கடைகளை வியாபாரிகள் வைக்க வேண்டும். மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் கடைகள் வைக்க கூடாது.தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், இரவு நேரத்தில் வண்டிகளை அவரவர் வீட்டிற்கு எடுத்துச்செல்ல வேண்டும். கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. குப்பையை திறந்தவெளியில் வீசுவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.