கழிவு நீரை சுத்திகரித்து ஏரியில் தேக்கும் திட்டம்; செயல் விளக்கம் அளிக்க மாநகராட்சி முடிவு
கோவை; கழிவு நீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பு செய்து, சின்னவேடம்பட்டி ஏரியில் தேக்கும் திட்டம் தொடர்பாக, இயற்கை ஆர்வலர்களுக்கு செயல் விளக்க கூட்டம் நடத்த, கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.கோவை வடக்கு பகுதியின், பிரதான நீராதாரமாக சின்னவேடம்பட்டி ஏரி அமைந்துள்ளது; 235 ஏக்கர் பரப்பு கொண்டது. கணுவாய் முதல் ஏரி வரை எட்டு கி.மீ., துாரத்துக்கு ராஜவாய்க்கால் உள்ளது.இந்த ஏரிக்கு, பவானி ஆற்றில் இருந்து நன்னீர் கொண்டு வரப்படும் என, தேர்தல் சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இச்சூழலில், கழிவு நீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பு செய்து, சின்னவேடம்பட்டியில் தேக்க, மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது.நாளொன்றுக்கு, 2.5 கோடி லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்க, 245 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி, நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.இப்பணியை எவ்வாறு மேற்கொள்வதென, ஆலோசனை நிறுவனம் 'சர்வே' செய்து வருகிறது. கழிவு நீரை மூன்றாம் நிலைக்கு சுத்திகரித்த பின், ஒரு பகுதியை ஏரியில் தேக்கவும், மற்றொரு பகுதியில் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வழங்கவும், ஆலோசிக்கப்பட்டுள்ளது.கழிவு நீரை சுத்திகரித்து தேக்கினால், சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகர், உடையாம்பாளையம், சரவணம்பட்டி விளாங்குறிச்சி பகுதிகளில் நிலத்தடிநீர் பாழ்படும் என்கிற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.மண், காற்று, துர்நாற்றம் உள்ளிட்ட சூழலியல் பாதிப்புகளும் ஏற்படும் என நினைப்பதால், இத்திட்டத்தை கைவிட வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இச்சூழலில், கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், அத்திக்கடவு - கவுசிகா நதி மேம்பாட்டு சங்கம் மற்றும் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு சார்பில் தன்னார்வலர்கள் பங்கேற்று, மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரை சந்தித்து முறையிட்டனர்.இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பு செய்து தேக்குவது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்திருக்கிறோம். மீண்டும் ஒரு முறை கூட்டம் நடத்தி, திட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும்.புது முயற்சியாக பரீட்சார்த்த முறையில், இத்திட்டத்தை மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே பல நகரங்களில் செயல்பாட்டில் இருக்கிறது. கையாளும் தொழில்நுட்பத்தில் குறைபாடு இருப்பின், அவற்றை சரி செய்து, இன்னும் திறம்பட மேம்படுத்தி செயல்படுத்தப்படும். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நகரங்களுக்கு அழைத்துச் சென்று, செயல் விளக்கம் அளிக்கப்படும்,'' என்றார்.