அன்னூர்:அன்னூர் நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக,உடனடியாக சாலையை அகலப்படுத்த வேண்டும். கோவையிலிருந்து, சரவணம்பட்டி, அன்னூர் வழியாக, சத்தியமங்கலம் மற்றும் கர்நாடகாவுக்கும், அவிநாசி, அன்னூர் வழியாக, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கும், தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை போதுமான அளவு அகலமாக இல்லாததால், அன்னூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அன்னூர் நகரை கடக்க, 20 நிமிடம் ஆகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து அன்னூர், வழியாக, மேட்டுப்பாளையம் வரை, 38 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, 238 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. அன்னூர் மக்கள் கூறியதாவது : அன்னூர் நகரில் மேற்கே கைகாட்டியில் துவங்கி, கிழக்கே சத்தி ரோடு கார்னர் வரை, 190 மீ., தூரம் தேசிய நெடுஞ்சாலை வசம் உள்ளது. இந்த 190 மீ., சாலை வெறும் 23 அடி அகலம் மட்டுமே உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையை அகலப்படுத்த, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பாதையில் கைகாட்டிக்கு மேற்கே 60 அடி அகலத்திலும், சத்தி ரோடு கார்னருக்கு கிழக்கே 60 அடி அகலத்திலும் சாலை விரிவாக்கப்படுகிறது. இதனால் வேகமாக வரும் வாகனங்கள், அன்னூர் நகருக்குள் அகலம் குறைவான சாலையில் நுழையும் போது, மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும். எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை, அன்னூர் நகரில் உள்ள, 190 மீ., நீள சாலையை குறைந்தது, 40 அடி சாலையாக அகலப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தினால் மட்டுமே, அன்னூர் நகரில் போக்குவரத்து நெரிசல் தீரும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.