உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் புதிய கற்கால பொருட்கள் கண்டுபிடிப்பு

கோவையில் புதிய கற்கால பொருட்கள் கண்டுபிடிப்பு

தொண்டாமுத்தூர்;கோவையில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தினர் மேற்கொண்ட அகழாய்வில், புதிய கற்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கோவை மாவட்டம், பூலுவபட்டி பேரூராட்சிக்குட்பட்ட, மோளப்பாளையம் கிராமம், மூலைக்காடு பகுதியில், தஞ்சாவூர் தமிழ் பல்கலையின் கடல்சார் தொல்லியல் மற்றும் பண்டைய வரலாற்று தொல்லியல் துறை தலைவர் பேராசிரியர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் கடந்த, 50 நாட்களாக, அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த அகழாய்வில், புதிய கற்காலத்தை சேர்ந்த பல விதமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தஞ்சாவூர் தமிழ் பல்கலையின் கடல்சார் தொல்லியல் மற்றும் பண்டைய வரலாற்று தொல்லியல் துறை தலைவர் பேராசிரியர் செல்வகுமார் கூறியதாவது:கோவை மாவட்டம், பூலுவபட்டி அடுத்த மோளப்பாளையத்தில், கடந்த 2019ம் ஆண்டு கள ஆய்வு மேற்கொண்டேன். அப்போது, இப்பகுதியில், சில மண்பாண்டங்கள் தென்பட்டன. அது, இரும்பு காலத்திற்கு முந்தையது என தெரியவந்தது.2021ம் ஆண்டு, தஞ்சாவூர் தமிழ் பல்கலை., சார்பில், இப்பகுதியில் உள்ள தனியார் விளைநிலத்தில், அகழாய்வு மேற்கொண்டேன். அப்போது, நடுத்தர வயதுடைய ஒரு பெண் மற்றும் 3 முதல் 7 வயதுடைய இரு குழந்தைகளின் எலும்புக்கூடுகள், விலங்குகளின் எலும்புக்கூடுகள், கடலில் இருந்து கிடைக்கக்கூடிய சங்காலான பொருட்கள், அம்மிக்கல், அரவை கற்கள், உருண்டை கற்கள், மெருகேற்றக்கூடிய கற்கள் என, பல வகையான கற்கள் கிடைத்தன.இப்பகுதியில் கிடைத்த இரண்டு கரித்துண்டுகளை, கரி அமில ஆய்விற்காக அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிட்டிக் ஆய்வகத்திற்கு அனுப்பினோம். ஆய்வகத்தில் இதன் காலத்தை கணித்து, இது கி.மு., 1,600 லிருந்து கி.மு., 1,400 வகையான காலத்தைச் சேர்ந்தது என்று உறுதிப்படுத்தினார்கள்.இப்போது, மேற்கொண்ட அகழாய்வில், புதிய தற்கால கோடாரிகள், கடலில் இருந்து வந்த சங்குகள், சங்கால் செய்யப்பட்ட மணிகள், ஒரு மனிதருடைய ஈமச்சின்னம், அவருடைய மண்டை ஓடு, பலவகையான விலங்கு எலும்புகள் தாவரச் சான்றுகள் அதாவது, பல்வேறு வகையான மணிகள், சங்கால் செய்யப்பட்ட மணி, சுடுமண்ணால் செய்யப்பட்ட மணி, நுண்கற்கருவிகள், பிறைச்சந்திரன் வடிவ கருவிகள், பிளேடுகள் என்று கூறக்கூடிய கருவிகளும், எலும்பால் செய்யப்பட்ட கருவிகளும், மான் கொம்பால் செய்யப்பட்ட கருவிகளும் பரவலாக கிடைத்துள்ளன. அதுமட்டுமன்றி, பல தாவர சான்றுகளும் இங்கு கிடைத்துள்ளன. எனவே, இந்த அகழாய்வை வைத்து பார்க்கும்போது, இங்கு வாழ்ந்த மக்கள் பலவகையான வேளாண்மை செயல்களிலும், அதுபோல, ஆடு, மாடு மேய்த்தலிலும், காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடுவதிலும் ஈடுபட்டிருந்தனர் என்பது மிகத் தெளிவாக புலப்படுகின்றது. எனவே இந்த அகழாய்வானது, கோயம்புத்தூர் பகுதியில் வரலாற்றை கி.மு., 1,600 வரை எடுத்துச் சென்றுள்ளது என்று நாம் உறுதியாக கூறலாம். இந்த அகழாய்வில் கிடைத்த இந்த மாதிரிகளையும், சான்றுகளையும், நாங்கள் இன்னும் காலக்கணிப்புக்கு உட்படுத்தவில்லை.இதை காலக்கணிப்பு உட்படுத்தி, இதிலிருந்து நமக்கு, இதற்கு முந்தைய காலத்திற்கான சான்றுகளும், இங்கு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இந்த அகழாய்வை நாங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். அடுத்தாண்டு, மீண்டும் இப்பகுதியில் ஆய்வு செய்வோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை