உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை பஸ் நிறுத்தங்களில் புதிதாக பயணிகள் நிழற்குடை; மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு

உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை பஸ் நிறுத்தங்களில் புதிதாக பயணிகள் நிழற்குடை; மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு

கோவை; கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்தில், இரு மார்க்கமாக, தேவையான இடங்களில் பஸ் ஸ்டாப்களில், பயணிகளுக்கான மேற்கூரை அமைக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.கோவை - அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது.மேம்பாலப் பணிக்காக, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை இருந்த பயணிகள் நிழற்குடைகள் அகற்றப்பட்டு உள்ளன.சில இடங்களில் பயன்பாட்டில் இருந்தாலும், பயணிகளுக்கு வசதியாக இல்லை. அதனால், 10.1 கி.மீ., துாரத்துக்கு இரு மார்க்கமாகவும், பஸ் ஸ்டாப் பகுதிகளில் புதிதாக பயணிகள் காத்திருக்கும் மேற்கூரைகள் அமைக்கப்பட உள்ளன. அப்பகுதிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:மாநகராட்சி பகுதி முழுவதும், 125 இடங்களில், பயணிகள் மேற்கூரையை புதுப்பித்து அமைக்க இருக்கிறோம். உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 32 இடங்களில் பஸ் ஸ்டாப் அமைக்க ஆய்வு செய்தோம். எந்தெந்த இடத்தில் எவ்வளவு அகலத்துக்கு அமைப்பதென இரு மார்க்கத்திலும் ஆய்வு செய்துள்ளோம்.'மெட்ரோ ரயில்' வழித்தடத்தில் எந்த இடத்தில் அமைப்பதென, மெட்ரோ நிறுவனத்துடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்; மெட்ரோ திட்டம் செயல்படுத்தும்போது, தேவைப்பட்டால் இடம் மாற்றி அமைக்கப்படும்.மாநில நெடுஞ்சாலைத்துறை தரப்பில், ரூ.2.6 கோடியே ஒதுக்கியிருப்பதால், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து, இப்பணியை மேற்கொள்கிறது.வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் இணைந்து, பஸ் ஸ்டாப்புகளை இறுதி செய்வர். அந்தந்த இடங்களில் பயணிகளின் வருகைக்கேற்ப, பஸ் ஸ்டாப் மேற்கூரை சைஸ் நிர்ணயிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அமைக்குமா மாநகராட்சி?

நகரில் தற்போது உள்ள நிழற்குடைகளால், பயணிகளுக்கு எவ்வித பயனும் இல்லை. மழை வந்தால் நனைய வேண்டும்; வெயில் அடித்தால் காய வேண்டும். எந்த பாதுகாப்பும் இல்லாத வகையில், அழகுக்காக அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கும் நிழற்குடைகளையாவது, மக்களுக்கு பயன் தரும் வகையில் அமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை