உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் துவக்கம்; இனி விடுமுறை எடுக்காமலே சிகிச்சை பெறலாம்

புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் துவக்கம்; இனி விடுமுறை எடுக்காமலே சிகிச்சை பெறலாம்

கோவை; கோவை மாவட்டத்தில் கூடுதலாக, 23 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையம் திறக்கப்படவுள்ளது. இம்மையங்களில் பணிபுரிய டாக்டர்கள், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான நேர்காணல் நேற்று நடந்தது. தமிழகத்தில், நகர்புறங்களில் பணிக்கு செல்பவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. பணிக்கு விடுமுறை எடுத்தே வரவேண்டிய சூழலில், பலர் வருவதை தவிர்க்கின்றனர். மக்களுக்கு பயன்படும் வகையில், 708 நகர்புற நலவாழ்வு மையங்கள், தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழுமத்தின் கீழ் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த, 2023, ஜூன் மாதம் 500 நகர்புற நலவாழ்வு மையங்கள் தமிழகத்தில் திறக்கப்பட்டன. கோவையில், 49 மையங்கள் திறக்கப்பட்டன. தற்போது இரண்டாம் கட்டமாக கோவையில் 23 மையங்கள் திறக்கப்படவுள்ளன. ஒவ்வொரு மையங்களும், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டப்பட்டுள்ளன. இம்மையங்களுக்கு தேவையான உபகரணங்கள், பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்டன. இம்மையங்களில், டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் துணை பணியாளர் என நான்கு பேர் வீதம் பணியில் இருப்பார்கள். இவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

'வேலைக்கு செல்வோர் வசதிக்காக புது மையம்'

மாவட்ட பொதுசுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது: முதல்கட்டமாக கோவையில், 49 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக பத்து நாட்களில், கூடுதலாக 23 மையங்கள் திறக்கப்படவுள்ளன. புதிய மையங்களுக்கான உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துணை பணியாளருக்கான நேர்காணல் நடந்து வருகின்றன. இம்மையங்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக, காலை, 8:00 முதல் 12:00 மணி வரையும், மாலை, 4:00 முதல் 8:00 மணி வரையும் செயல்படும். விரைவில் மையம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை