சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கோலாகலம்
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று கொண்டாடி மகிழ்ந்தனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை மக்கள் கொண்டாடினர். நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் விடுமுறை அளிக்கப்பட்டதால், பலரும் குடும்பத்துடன், பொழுதை கழிக்க சுற்றுலா தலங்களுக்கு சென்றனர்.ஆழியாறு அணைப்பகுதியில், நேற்று கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுலா பயணியர் அதிகளவு வந்தனர். பலரும் ஆழியாறு அணைப்பூங்கா மற்றும் அணைப்பகுதியில் நின்று புகைப்படம் எடுத்தனர். இயற்கையாக கொட்டும் கவியருவியில், குளித்து மகிழ்ந்தனர்.ஆழியாறு ஆற்றின் ஒரு பகுதியான பள்ளி வளங்கன் அணைக்கட்டு பகுதியில், அதிகளவு சுற்றுலா பயணியர் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்ந்தனர்.சுழல், புதை மணல் உள்ள ஆபத்தான பகுதி என்பதால் குளிக்க சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறி நேற்று சுற்றுலா பயணியர் குடும்பத்துடன் குளித்தனர். வால்பாறை
புத்தாண்டு தினத்தை இயற்கையோடு இணைந்து கொண்டாட, வால்பாறையில் நேற்று முன்தினம் இரவே சுற்றுலா பயணியர் வரத்துவங்கினர். இதனால், வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகள் ஹவுஸ்புல் ஆக காணப்பட்டன.இந்நிலையில், நேற்று காலை வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாபயணியர் குளித்து மகிழ்ந்தனர். தேயிலை எஸ்டேட்களில் செல்பி எடுத்தும் நீர்வீழ்ச்சிகளில் குளித்தும் மகிழ்ச்சியடைந்தனர்.இங்குள்ள அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், டைகர் பால்ஸ், கவர்க்கல் வியூ பாய்ண்ட், நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்தனர்.வால்பாறையில் தற்போது பனிப்பொழிவுக்கு இடையே குளுகுளு சீசன் நிலவுகிறது. இதனால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் திரண்டு, சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர். சுற்றுலா பயணியர் வருகையால் வால்பாறை களை கட்டியது.
கண்காணிப்பு தேவை!
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஆழியாறு, வால்பாறை பகுதிக்கு, பைக், கார் போன்ற வாகனங்களில் சுற்றுலா பயணியர் குடும்பத்துடன் திரண்டனர். அதேபோன்று, நீர்நிலைகள், காட்சிமுனைகள், கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக நின்று போட்டோ எடுத்தனர்.இதனால், மலைப்பாதையில் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்பட்டது. ஆனால், எவ்வித கண்காணிப்பும் இல்லாததால், சுற்றுலா பயணியர் வனப்பகுதியிலும், நீர்நிலைகளிலும் அத்துமீறி சென்றனர்.விடுமுறை நாட்களில், வாகன விபத்து, வீண் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார், நீர்வளத்துறை அதிகாரிகள் இணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.