நிம்மதியாக அமர்ந்து சாப்பிட இடம் தரலையே! அறிவுசார் மையத்துக்கு வருவோருக்கு
கோவை: கோவை மாநகராட்சி நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்துக்கு படிக்க வரும் போட்டித் தேர்வர்கள் மதிய உணவு சாப்பிட, உணவு அறை அமைத்து தரவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், போட்டித் தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், கோவை ஆடீஸ் வீதியில், 7800 சதுரடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட நவீன வசதிகளுடன், நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வங்கி, ரயில்வே, டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான நுால்கள் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வசதிகள் உள்ளன.இந்த அறிவுசார் மையத்துக்கு தினமும், 250 முதல் 300 பேர், தேர்வுக்கு தயாராக வருகின்றனர். நாள் முழுவதும் இங்கு இருந்து படிப்பவர்கள், மதிய உணவு கொண்டு வருகின்றனர்.இவர்கள் அமர்ந்து உணவு சாப்பிட இடம் இல்லாததால், நுாலக வளாகத்தில் தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். நுாலக வளாகத்தில் உணவகத்துக்கென, தனியாக அறை கட்டப்பட்டுள்ளது (காப்டீரியா) அந்த அறை திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.அங்குள்ள காலி இடத்தில் உணவு சாப்பிட, தனியாக ஒரு ெஷட் அமைத்து கொடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாசகர்கள் கொண்டு வரும் பேக் மற்றும் உணவு பொருட்களை வைக்க, பாதுகாப்பான ரேக் வசதிகள் இல்லாததால் தரையில் குவித்து வைத்துள்ளனர்.தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் என, மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'பிற நாளிதழ்கள் வேண்டும்'
போட்டி தேர்வுக்கு படித்து வரும் உக்கடத்தை சேர்ந்த மனோ கூறுகையில், ''இங்கு படிக்க வருபவர்கள் முழுநேரம் இருந்து படிக்கின்றனர். மதிய உணவு நேரத்தில் சாப்பிட இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். நுாலகத்துக்கு இரண்டு ஆங்கில நாளிதழ்களை தவிர, தமிழ் பத்திரிகைகள் வருவதில்லை. எல்லா பத்திரிகைகளும் வந்தால் உதவியாக இருக்கும்,'' என்றார்.
'விரைவில் உணவகம் திறப்பு'
மாநகராட்சி உதவி கமிஷனர் செந்தில்குமரன் கூறுகையில், ''அங்குள்ள உணவகத்துக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் உணவகம் திறக்கப்பட உள்ளது. அதன் அருகில் அமர்ந்து உணவு சாப்பிட ெஷட் அமைக்க இருக்கிறோம். பொருட்கள் வைக்க அலமாரிக்கு ஆர்டர் கொடுத்து இருக்கிறோம், விரைவில் வந்து விடும்,'' என்றார்.