காந்தி சிலை அருகே தனியார் மதுக்கடை வேண்டாம்! குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி காந்தி சிலை அருகே தனியார் மதுபானக்கடை வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவகலத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது.மா.கம்யூ., கட்சி தாலுகா குழு உறுப்பினர் மகாலிங்கம் மற்றும் அரசியல் கட்சியினர், அரசியல் சமூக இயக்கங்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், காந்தி சிலை அருகே தனியாரால் மதுபானக்கடை திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அப்பகுதி மக்கள் அதிகமாக கூடுமிடமாகவும், அங்கு, மருத்துவமனைகள், வங்கிகள், வியாபார நிறுவனங்கள் அமைந்துள்ளன.நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், அப்பகுதி வழியாகத்தான் செல்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பகுதியாகவும் உள்ளது.நகரின் மையப்பகுதியில் மதுபானக்கடை திறக்கப்படுவது ஏற்புடையதல்ல. எனவே, இது குறித்து விசாரித்து தனியாரால் திறக்கப்படும் மதுக்கடைக்கான அனுமதியை ரத்து செய்து, அங்கு அமைவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு, வலியுறுத்தப்பட்டுள்ளது.* வால்பாறையில் உள்ள, கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை எஸ்டேட் பகுதிகளில், சாலை மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது, வனவிலங்குகளின் தொல்லை, மாற்றுத்தொழில் இன்றியும் மக்கள் சிரமப்படுகின்றனர்.கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், இரண்டு லட்சம் பேராக இருந்த மக்கள் தொகை, தற்போது, 30 ஆயிரம் பேராக குறைந்துள்ளது. வால்பாறையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். வால்பாறையில் விசேஷ நாட்களிலும் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.இதுபோன்ற சூழலில், வாடகைக்கு ஆட்டோவை இயக்கும் போது காலதாமதம் ஏற்பட்டு பெட்ரோல், டீசல் வீணாவதால்சிரமப்படுகிறோம்.இச்சூழலில், தற்போதுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் கஷ்டப்படுவதை போல, புதிதாக ஆட்டோ 'பர்மிட்' பெறுபவர்களும் கஷ்டப்படுவர்.அதனால், புதிய ஆட்டோ 'பர்மிட்' வழங்க கூடாது என, மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. எனவே, புதிய ஆட்டோ பர்மிட் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.* கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:கிணத்துக்கடவு, கோதவாடி ஆதிதிராவிடர் காலனி பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு, கடந்த, 1995ல் 70க்கும் மேற்பட்டோருக்கு எச்.எஸ்.டி., பட்டா வழங்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த பட்டா, வருவாய் கிராம பதிவேட்டில் பதியப்படவில்லை. எனவே, பழைய எச்.எஸ்.டி., பட்டாவை ரத்து செய்து, தற்போது உள்ள நபருக்கு புதிய எச்.எஸ்.டி., பட்டா வழங்கி, வருவாய் கிராம பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.குருநல்லிபாளையம் கிராமத்தில், 380 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் அமைந்துள்ளது. தற்போது போதிய தண்ணீர் இல்லாமல் குளம் வறண்டுள்ளது. கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக முதல்வர், அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் எம்.பி., சண்முகசுந்தரம், மாவட்ட கலெக்டர் முயற்சியால், பி.ஏ.பி., உபரிநீர் குளத்துக்கு வழங்கப்பட்டது. அதுபோன்று தண்ணீர் வழங்கி நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.