உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை அலைச்சல் இல்லை! விரைவில் செயல்படுத்த பணிகள் தீவிரம்

தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை அலைச்சல் இல்லை! விரைவில் செயல்படுத்த பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைப்பதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் பொள்ளாச்சியில் செயல்பட உள்ளதால், மக்கள் வீண் அலைச்சல் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி வருவாய் கோட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட நான்கு தாலுகாக்களை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது.பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் வசிக்கும் மக்கள், பாஸ்போர்ட் சேவைகளுக்காக கோவைக்கு செல்ல வேண்டியதுள்ளது.வால்பாறையில் இருந்து, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு செல்ல, நான்கு முதல், ஐந்து மணி நேரம் ஆகிறது. 40 கொண்டை ஊசி வளைவு கொண்டதாக சாலை என்பதால், மக்கள் மிகுந்த அலைச்சலுக்கு ஆளாவதுடன், நேரம் மற்றும் பண விரயம் செலவாகிறது. இதுபோன்று, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதி மக்கள், கோவைக்கு செல்ல நேரம் விரயமாகிறது.எனவே, பொள்ளாச்சி பகுதியில், பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பா.ஜ.,வினர் சார்பிலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டது.அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவில் பாஸ்போர்ட் சேவை மையம் இல்லாத ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் அமைக்க, மத்திய தபால் துறையின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தில், இடம் ஒதுக்கீடு செய்து தந்ததும் பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது.பொள்ளாச்சி தபால் அலுவலகத்திலேயே, பாஸ்போர்ட் கேந்திரா அலுவலகம் திறக்க இடம் கேட்டு, பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள், தபால் துறையிடம் அனுமதி கோரினர்.அதன்படி, பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தின் கீழ் பகுதியில் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது, அங்கு பாஸ்போர்ட் சேவை மையம் அமைப்பதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மையம் துவக்குவது எப்போது?

அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தில், பாஸ்போர்ட் கேந்திரா துவங்க இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது, அங்கு மூன்று, 'கவுன்ட்டர்'கள், பாஸ்போர்ட் அதிகாரி அறை, விண்ணப்பங்கள் சரிபார்த்தலுக்கு தனி அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இப்பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. பணிகள் முடிந்ததும், விரைவில் அதிகாரிகள் பார்வையிட்டு, பாஸ்போர்ட் சேவை மையத்தை துவங்குவர்.பாஸ்போர்ட் புதுப்பித்தல், புதியதாக விண்ணப்பித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். இதன் வாயிலாக, மக்களுக்கு வீண் அலைச்சல் தவிர்க்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி