பொள்ளாச்சி -பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கு, கோவில் வளாகத்தில், நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நடப்பாண்டு தேர்த்திருவிழாவில் நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி, நேற்றுமுன்தினம் இரவு கோவில் வளாகத்தில் நடந்தது.மாலை, 4:00 மணிக்கு பல்வேறு வகையான பூக்கள் கொண்டு, அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, அனுமதி கேட்கப்பட்டது. தொடர்ந்து, திருவிழா நிகழ்வு குறித்து முறைப்படி, அறிவித்து, நோன்பு சாட்டப்பட்டது.நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகத்தினர், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பாரம்பரிய முறைப்படி, வாத்தியங்களை இசைத்து நோன்பு அறிவிப்பு செய்தனர். நோன்பு சாட்டப்பட்டதையடுத்து, பக்தர்கள் விரதத்தை துவக்கியுள்ளனர்.வரும் நாட்களில், அணி எடுப்பு, கம்பம் நடுதல், மாவிளக்கு எடுத்தல், பூவோடு வைத்தல், வெளிப்பூவோடு, கிராம சாந்தி, கொடி கட்டுதல், ஆயக்கால் போடுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மார்ச் 5ம் தேதி இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் நடக்கிறது. 7ம் தேதி இரவு, இரண்டாம் நாள் தேரோட்டம், 8ம் தேதி இரவு, மூன்றாம் நாள் தேரோட்டம், தேர் நிலை நிறுத்தம், தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது.