கோவை : தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான ஆலைகள் மூடப்பட்டதால், வாழ்விழந்த தொழிலாளர்களுக்கு, முழு சம்பளமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.நாடு முழுவதும், தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான, 23 என்.டி.சி., மில்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கோவையில் உள்ள ஐந்து மில்களில், 2,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.கொரோனா பரவல் காரணமாக, 2020ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல், இந்த மில்கள் அனைத்தும் மூடப்பட்டன. இருப்பினும், மே 17ம் தேதி வரை முழுச்சம்பளம் வழங்கப்பட்டது. அதன்பின் பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து, இயல்பு நிலை திரும்பியும் மில்கள் திறக்கப்படாததால், 2020 முதல் 2023ம் ஆண்டு வரை எச்.எம்.எஸ்., - சி.ஐ.டி.யூ., - ஏ.டி.பி., உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும், நாடு முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.மத்திய ஜவுளித்துறை அமைச்சர், துறை செயலர் உள்ளிட்டோரை பலமுறை, டில்லியில் சந்தித்து முழு சம்பளம் வழங்க வேண்டும், மில்களை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.இந்நிலையில், நிலுவை சம்பளத்தை வழங்க என்.டி.சி., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது, பஞ்சாலை தொழிலாளர்களிடம் மகிழ்ச்சியை தந்துள்ளது. அதே நேரம், மூடப்பட்ட மில்களை உடனடியாக திறக்கவும் கோரிக்கை வலுத்துள்ளது.
உடனே திறக்க வேண்டும்'
அனைத்து சங்கங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ராஜாமணியிடம் கேட்டபோது, ''நாடு முழுவதும் உள்ள, 23 பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில், ஒவ்வொரு தொழிற்சங்கத்துக்கு ஒருவர் வீதம், மும்பையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தோம்.அப்போது, நிலுவை சம்பளத்தில், 2020 மே 18 முதல் 2021 டிச., 31 வரையிலான, 19.5 மாதங்களுக்குரிய, ஒரு பகுதி தொகை காசோலையாக வழங்கப்பட்டது. மீதித்தொகை இன்னும் ஒரு மாதத்தில் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.சி., பஞ்சாலைகளை உடனடியாக இயக்க வேண்டும்,'' என்றார்.