சர்வதேச அளவில் ஜாதிக்காய்க்கு கிராக்கி சாகுபடி விவசாயிகளுக்கு சிறந்த எதிர்காலம்
கோவை : ''சர்வதேச அளவில் ஜாதிக்காயின் தேவை மிக அதிகமாக உள்ளதால், இதை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது,'' என, நம்பிக்கை தெரிவிக்கிறார், காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன்.சமவெளியில் ஜாதிக்காய் சாகுபடி குறித்து அவர் கூறியதாவது:சமவெளிப்பகுதிகளில், தென்னை, பாக்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை தரக்கூடிய பயிர் ஜாதிக்காய். ஜாதிக்காய் கன்றுகளுக்கு ஆரம்பத்தில் நிழல் அவசியம் என்பதால், தென்னை மற்றும் பாக்கு தோப்புகளில் ஊடுபயிராக நடவு செய்யலாம்.ஜாதிக்காய் சாகுபடிக்கு மண்வளம் மிக அவசியம். நீர் தேங்கி நிற்காமல் வடிகால் வசதி உள்ள நிலங்களில் நன்றாக வளரும். ஜாதிக்காய் சாகுபடிக்கு உப்பு நீர் உகந்ததல்ல. தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, கோபி, திண்டுக்கல், புதுக்கோட்டை உட்பட சமவெளி பகுதிகளிலும் விளைகிறது. பொள்ளாச்சியில் தென்னைக்குள் ஊடுபயிராக ஜாதிக்காய் சாகுபடி செய்து நல்ல மகசூல் கண்டுள்ளனர்.ஜாதிக்காயில் இருந்து ஜாதிக்காய் எண்ணெய், ஜாதிப்பத்திரி எண்ணெய் போன்ற மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சதைப்பகுதியில் இருந்து ஊறுகாய், ஜாம் போன்றவை தயாரிக்கப்படுகிறது. பழச்சாறு, ஊறுகாய், ஜெல்லி போன்று மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கலாம்.ஜாதிக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. நாம் சமவெளி பகுதிகளிலும் ஜாதிக்காய் சாகுபடி செய்யும் போது நமது உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதோடு ஏற்றுமதியும் செய்யமுடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.