ஏப்., மாத ஊதியம் கிடைக்காமல் சத்துணவு ஊழியர்கள் தவிப்பு
வால்பாறை,; தமிழ்புத்தாண்டு நெருங்கும் நிலையிலும் சத்துணவு ஊழியர்களுக்கு நேற்று வரை ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை நகராட்சியில் மொத்தம், 89 சத்துணவு மையங்கள் உள்ளன. சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் உட்பட, 180 பேர் பணிபுரியாற்றுகின்றனர். இவர்களுக்கு, மாதம் தோறும் வங்கி கணக்கில் 1ம் தேதி ஊதியம் வரவு வைக்கப்படும். இந்நிலையில், நேற்று வரை இம்மாத ஊதியம் வழங்காததால், கடும் அதிருப்தியில் உள்ளனர்.சத்துணவு ஊழியர்கள் கூறுகையில், 'கடந்த சில மாதங்களாகவே, வால்பாறை நகராட்சியில் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன் உள்ளிட்ட எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை.சம்பளத்திற்காக மாதம் தோறும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. காலதாமதமாக ஊதியம் வழங்கப்படுவதால், குடும்ப செலவுகளை சமாளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது,' என்றனர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சத்துணவு பணியாளர்களுக்கு மாத ஊதியம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக இந்த மாதம் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.விரைவில், ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான சலுகைகள் படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.