100 நாள் திட்டப் பணிகளில் ஆட்சேபனை சமூகத் தணிக்கை அறிக்கையில் தகவல்
அன்னுார்: 100 நாள் வேலை திட்டப் பணிகளில் நான்கு ஆட்சேபனைகள் சமூக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டன. அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், குன்னத்துாரில், கடந்த ஆண்டு ஏப். 1ம் தேதி முதல், 2024 மார்ச் 31ம் தேதி வரை, 57 லட்சம் ரூபாய் மதிப்பில், 51 பணிகள், 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்பட்டுள்ளன.மேலும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில், 2016 முதல் 2022 வரை ஏழு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இப்பணிகளை அளவீடு செய்து, ஆவணங்களை ஆய்வு செய்து, 100 நாள் திட்ட தொழிலாளர்களிடம் வேலை அட்டை மற்றும் வங்கி பாஸ்புத்தகத்தை பரிசோதித்தனர்.தணிக்கை அறிக்கை தயாரிக்கும் பணி கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்தது. தணிக்கை அறிக்கை வாசிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் குன்னத்துாரில் நேற்று நடந்தது.கூட்டத்தில், தணிக்கையாளர் கனகராஜ் சமூக தணிக்கை அறிக்கையை வாசித்து பேசுகையில், ''மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நான்கு ஆட்சேபனைகள் கண்டறியப்பட்டன. இந்த ஆட்சேபனைகளை ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.இதேபோல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் ஏழு வீடுகள் கட்டப்பட்ட பணிகளிலும், நான்கு ஆட்சேபனைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றையும் ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும்,'' என்றார்.கூட்டத்தில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் பேசுகையில், 'ஆண்டுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை தருகின்றனர். மற்ற நாட்களில் வேலை கிடைப்பதில்லை. எனவே குறைந்தது 150 நாட்களாவது வேலை தர வேண்டும். தற்போது வழங்கப்படும் 319 ரூபாயை 400 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். வார சம்பளத்தை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்,' என்று கோரிக்கை விடுத்தனர்.ஊராட்சி நிர்வாகிகள், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிப்பதாக பதிலளித்தனர்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பீர்முகமது, ஊராட்சி தலைவர் கீதா தங்கராஜ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.