உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓடை துார்வாரியாச்சு! மழைநீர் தேங்காமல் வெளியேற நடவடிக்கை; கழிவுகளை வீச வேண்டாம் என வேண்டுகோள்

ஓடை துார்வாரியாச்சு! மழைநீர் தேங்காமல் வெளியேற நடவடிக்கை; கழிவுகளை வீச வேண்டாம் என வேண்டுகோள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில், மழையை முன்னிட்டு ஓடைகள் துார்வாரப்பட்டு, கழிவுகள் அகற்றப்படுகின்றன. மேலும், குழுக்கள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சியில்,ஓடைகளில் தேங்கி நிற்கும் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு, நீர் முறையாக செல்ல முடியாத நிலை இருந்தது. பருவமழை துவங்கியுள்ள நிலையில் மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் இருந்தது.இது குறித்து நகராட்சி கமிஷனர் கணேசன் ஆய்வு செய்து, ஓடைகளை துார்வார நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.கமிஷனர் கூறியதாவது:நகராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில், மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சின்னாம்பாளையம் ஊராட்சியில் இருந்து வரும் ஓடை, நகராட்சியின் பொட்டுமேடு வழியாக மரப்பேட்டை, கண்ணப்பன் நகர் வழியாக வெளியேறுகிறது.இந்த ஓடைகளில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் துார்வாரப்பட்டு தற்போது மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.மழை காலங்களில் தாழ்வான பகுதியான நேருநகர், பெரியார் காலனி கிழக்கு, மேற்கு, மணியகாரர் காலனி பகுதி மக்களுக்கு தெப்பக்குளம் நடுநிலைப்பள்ளியும்; பொட்டுமேடு, மரப்பேட்டை பள்ளம், சுடுகாட்டு பள்ளம் பகுதி மக்களுக்கு சிக்கஞ்செட்டியார் துவக்கப்பள்ளியும் நிவாரண முகாமாக அமைக்கப்பட்டுள்ளது.கல்லுக்குழி, குமரன்நகர் பகுதி மக்களுக்கு, குமரன் நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியும்; கண்ணப்பன் நகர், அண்ணா காலனி, ஜீவா ெஷரிப் காலனி, மோதிராபுரம், பொட்டுமேடு பகுதி மக்களுக்கு நகராட்சி ஏ.பி.டி., ரோடு தொடக்கப்பள்ளியும் நிவாரண முகாமாக அமைக்கப்பட்டுள்ளன.தாழ்வான பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லுதல், உணவு, குடிநீர் வழங்குதல், மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தல், பணியாட்கள், கருவிகள், இயந்திரங்களை தயார் செய்தல் என, பொறுப்புகள் பிரித்து பணிகளை மேற்கொள்ள நகராட்சி அலுவலர்கள் கண்காணிப்பு செய்கின்றனர்.வெள்ள நிவாரண காலங்களில், மீட்பு பணிக்கு தேவையான பொக்லைன் இயந்திரம், தண்ணீரை வெளியேற்றும் மோட்டார், பம்ப்செட், லைட், மர அறுவை கருவிகள், தார்பாய்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், தீயணைப்புத்துறை, தாலுகா அலுவலகம், மின்வாரியம், போக்குவரத்து கழகம், நெடுஞ்சாலைத்துறை, பி.எஸ்.என்.எல்., என மற்ற அரசுத்துறை அலுவலகங்களுடன் இணைந்து, வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொண்டு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நகரப்பகுதியில் உள்ள கால்வாய்களில் கழிவுகளை துார்வார அந்தந்த கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

ஒத்துழைப்பு கொடுங்க!

ஓடைகள், சாக்கடை கால்வாய்களில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதால்,மழை காலங்களில் அடைப்பு ஏற்பட்டு, தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்கு மழைநீர் புகுந்து விடுவதுடன்,ரோடுகளில் கழிவுநீருடன் கலந்து செல்கிறது. பருவமழைக்காக ஓடைகளை துார்வாரும் போது, அதிகளவு பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகிறது.ஓடைகள் மற்றும் கால்வாய்களில் கழிவுகளை வீசுவதை தவிர்த்து, துாய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும். நகராட்சியின் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என, நகராட்சி கமிஷனர் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை