மழை பெய்தால் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேக்கம்; கண்காணித்து தடுக்க ஷிப்ட் முறையில் அதிகாரிகள் நியமனம்
கோவை,; கோவையில் உள்ள சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க, 12 மணி நேர பணி அடிப்படையில், 'ஷிப்ட்' முறையில் பொறியியல் பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும், 31 வரை பணிபுரியும் வகையில், பணி ஒதுக்கப்பட்டுள்ளது.கோவையில் ஒரு மணி நேரம் மழை பெய்தாலே, மேம்பாலங்களுக்கு கீழுள்ள சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது. அச்சமயங்களில், பிரதான சாலைகளில் வாகனப் போக்குவரத்து முடங்குகிறது. லங்கா கார்னர் மற்றும் உப்பிலிபாளையம் பகுதியில் பாக்ஸ் வடிவிலான கான்கிரீட் மழை நீர் வடிகால் பதித்து, முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்ததால், இனி, தண்ணீர் தேங்கவே தேங்காது என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கையுடன் இருந்தனர். பொய்த்த நம்பிக்கை
சில நாட்களுக்கு முன் பெய்த கன மழைக்கு, ரோட்டில் ஆறு போல் தண்ணீர் ஓடியது; லங்கா கார்னர், அவிநாசி ரோடு மேம்பால சுரங்கப் பாதையில் வழக்கம்போல் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியது; லங்கா கார்னர் சுரங்கப்பாலத்தில் வாகனம் சிக்கியது. கூட்ஸ் ஷெட் ரோடு வடிகாலில், தண்ணீர் செல்லாமல் ரோட்டில் ஓடியது. இவ்விடங்களை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்து, துரித நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.கிக்கானி ரயில்வே பாலம், காளீஸ்வரா மில் ரோடு, லங்கா கார்னர் பாலம், அவிநாசி ரோடு மேம்பாலம், ஆவராம்பாளையம் ரயில்வே பாலம், நீலிக்கோணாம்பாளையம் மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி ரயில்வே பாலம், இருகூர் ரயில்வே பாலம், சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட், நெசவாளர் காலனி ஆகிய, 10 இடங்களில் தண்ணீர் தேங்கும் என, அடையாளம் காணப்பட்டுள்ளது. அதிகாரிகள் நியமனம்
இனி, மழை பெய்தால் சுரங்கப்பாதைகள் மற்றும் பிரதான சாலைகளில் மழை நீர் தேங்குவதை கண்காணித்து, நீர் உறிஞ்சும் மோட்டார்கள், மழை நீர் அகற்றும் வாகனங்கள் மூலமாக உடனுக்குடன் அகற்றி, பொதுமக்கள் பாதிக்காத வகையில், மழைக்காலம் முடியும் வரை துரிதமாக செயல்பட வேண்டும் என 'ஷிப்ட்' முறையில் பொறியியல் பிரிவு அதிகாரிகளை நியமித்து, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். காலை, 8:00 முதல் இரவு, 8:00 வரை ஒரு அதிகாரி; இரவு, 8:00 முதல் மறுநாள் காலை, 8:00 மணி வரை ஒரு அதிகாரி வீதம் நியமித்திருக்கிறார். இவர்கள், 31ம் தேதி வரை பணிபுரியும் வகையில், பணி ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சுரங்கப்பாதைகளில் உள்ள பம்ப்பிங் ஸ்டேஷன்களில், சம்பந்தப்பட்ட வார்டு பொறியாளர்களுடன் இணைந்து, மழை நீர் அகற்றும் பணிக்கு தேவையான ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும்; சுணக்கமின்றி இப்பணிகளை செய்ய தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அலுவலர்களை பொறுப்பாக்கி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமிஷனர் எச்சரித்திருக்கிறார்.