அனுமதியின்றி மினி பஸ் இயக்கம்: நடவடிக்கைக்கு அதிகாரிகள் தயக்கம்
கோவை: கோவை தெற்கு ஆர்.டி.ஓ., எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மினி பஸ்கள் இயக்குவதில் நிலவும் பிரச்னைகளை களைய வேண்டும் என்று, மினி பஸ் உரிமையாளர்கள் கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை தெற்கு ஆர்.டி.ஓ., எல்லைக்குட்பட்ட அபிராமி கார்டன் முதல் செரயாம்பாளையம் வரை மினிபஸ் இயக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பதிலாக மினிபஸ் முத்துக்கவுண்டன்புதுார் முதல் சூலுார் பிரிவு வரையிலும், மேலும் சூலுார் பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளேயும் அனுமதி பெறாமல் இயங்குகிறது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மினிபஸ் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மினி பஸ் உரிமையாளர் சண்முகசுந்தரம் கலெக்டரிடம் மனு அளித்தார். சண்முகசுந்தரம் கூறுகையில், ''கோவை தெற்கு வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட வழித்தடங்களில் மினிபஸ்களை இயக்குவதில், ஏராளமான குளறுபடிகள் உள்ளன. அவற்றை கள ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள் களைய வேண்டும். ஆனால் அதற்கு முயற்சிக்காமல் அவர்கள் விசாரணைக்கு அழைத்து சமாதானம் பேசுகின்றனர். அது தவறு செய்பவர் களுக்கு சாதாரண விஷயமாக போய்விட்டது,'' என்றார். இது குறித்து, கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்கோதை கூறுகையில், ''புகாரின் பேரில் கள ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.