உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்களில் ஒருவன் ஆளுங்கட்சியை அச்சம் கொள்ள வைத்த யாத்திரை!

உங்களில் ஒருவன் ஆளுங்கட்சியை அச்சம் கொள்ள வைத்த யாத்திரை!

பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அமைந்திருக்கும் கும்மிடிப்பூண்டியிலும், மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில், பழவேற்காடு ஏரி என சிறப்பு வாய்ந்த பொன்னேரியிலும், திருவேற்காடு கருமாரியம்மன் வாழும் ஆவடி சட்டசபை தொகுதியிலும், மக்கள் ஆதரவுடன் நடத்தப்படும் பா.ஜ.,வின், 'என் மண்; என் மக்கள்' யாத்திரை மிகச் சிறப்பாக நடந்தது.

ராணுவ கட்டுப்பாடு

இந்த நடைபயணத்தின் வெற்றி, ஆளுங்கட்சியை அச்சம் கொள்ள செய்திருக்கிறது. அதனால் தான் சென்னையில் நுழையும்போதே, காவல் துறை பாதயாத்திரை குழுவினரைத் தடுக்கப் பார்க்கிறது;அனுமதி மறுக்கிறது. தமிழகம் முழுவதும் எந்தவித பதற்றத்தையும், எந்தவிதமான இடையூறையும் ஏற்படுத்தாமல், மக்கள் அனைவரும் வரவேற்று கொண்டாடும் விதமாக, பாதயாத்திரை 195 தொகுதிகளில் வெற்றிகரமாக நடந்து உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கி, பிப்ரவரி வரை நடக்கும் இந்த பாதயாத்திரையால் போக்குவரத்துக்கான இடையூறோ, ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும்போது இடையூறோ ஏற்படவில்லை. மிகத் துல்லியமாக, நேர்த்தியாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. எந்த கட்சியும் இப்படி ராணுவக் கட்டுப்பாட்டுடன் நிகழ்ச்சியை நடத்தியதில்லை. இதெல்லாமே காவல் துறைக்கும் நன்கு தெரியும். ஆனாலும், சென்னையில் அனுமதி மறுத்துள்ளது. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுத்திருக்கும் காவல் துறை, யாத்திரைக்கு மட்டும் மறுக்கிறது. காரணம், பாதயாத்திரையின் முழு வெற்றி தான். இப்பவும் ஒரு உறுதியை காவல் துறைக்கு கொடுக்க முடியும். இத்தனை நாட்களும் எந்தவித சிறு அசம்பாவிதமும் இல்லாமல், பாதயாத்திரையை வெற்றிகரமாக நடத்தியவர்களால், சென்னையிலும் அமைதியாக நடத்த முடியும்.

பொய் விமர்சனம்

கும்மிடிப்பூண்டி தொகுதியின் முக்கிய பிரச்னை, 'சிப்காட்'டில் செயல்படும் டயர் மற்றும் இதர தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் மாசு மற்றும் நச்சுக் கழிவுகள். 28 ஆண்டுகளாக மக்கள் அவதிக்குள்ளானது தெரியாமல், திராவிட கட்சிகள் ஆட்சி நடத்துகின்றன.மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பங்கீடு குறித்து, மத்திய அரசு மீது நிறைய விமர்சனங்கள் பொய்யாக வைக்கப்படுகின்றன. ஏற்கனவே, தமிழகத்துக்கு வழங்கப்பட்டதைக் காட்டிலும் பிரதமர் மோடி அரசு, 42 சதவீதம் அளவுக்கு உயர்த்தி வழங்கி உள்ளது.ஆனால், இந்த உண்மைகளை மறைத்து தி.மு.க., வழக்கம் போலபொய்யுரைத்துக் கொண்டு உள்ளது.

சாதனைகள் ஏராளம்

கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்திற்கான திட்டங்கள், உதவித் தொகை மற்றும் நிதி பங்கீட்டின் மதிப்பு, 10.76 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். தமிழகத்தின் நேரடி வரிப் பங்களிப்பான 5.16 லட்சம் கோடியை விட, இரண்டு மடங்கு அதிகமாக மத்திய அரசு திரும்பிக் கொடுத்துள்ளது. * நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம், மீனவர் நலன் காக்க தனி அமைச்சகம், 28 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடனுதவி, 7 கோடி மகளிர் சுய உதவி குழுக்கள், 7.2 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி, 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலமாக, இந்தியாவை நோக்கி உலக நாடுகளை வரச் செய்தது, கடந்த ஒன்பது ஆண்டுகளில் 25 கோடி மக்களை, ஏழ்மை நிலையிலிருந்து வெளிவரச் செய்தது என, பிரதமர் செய்த சாதனைகள் ஏராளம்.

மெச்சத்தகுந்த இடம்

கடந்த 1961ம் ஆண்டு, காமராஜரின் முயற்சியால் ஆவடிக்கு கொண்டு வரப்பட்டது தான் ஆவடி ராணுவ தொழிற்சாலை. காங்கிரஸ் ஆட்சியில், பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. மோடி ஆட்சிக்கு வந்த பின், மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் பெரும் பலனடைவது, இந்தத் தொழிற்சாலையும், இங்குள்ள பணியாளர்களும் தான். கடந்த 2021 செப்டம்பரில் ராணுவத்தின் தேவைக்கு, சென்னை ஆவடி ராணுவத் தொழிற்சாலைக்கு அர்ஜுன் ரக டேங்குகள் தயாரிக்க, 7,523 கோடி ரூபாய் மதிப்பிலான 'ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆவடி ராணுவத் தொழிற்சாலை உற்பத்தியில் மெச்சத்தகுந்த இடத்துக்கு உயர்ந்துள்ளது. கருத்துக் கணிப்புகள், தமிழக பா.ஜ.,வுக்கு 20 சதவீதத்துக்கும் கூடுதலான ஓட்டுகள் கிடைக்கும் என்கின்றன. இது, 30 சதவீதத்துக்கும் கூடுதல் என்பது தான் நிஜம். அது, லோக்சபா தேர்தல் வாயிலாக நிரூபிக்கப்படும். மோடியின் கரங்களை வலுப்படுத்த, தமிழக பா.ஜ., - எம்.பி.,க்கள் பார்லிமென்ட் செல்வது உறுதி.பயணம் தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை