ரோட்டோரத்தில் நின்றவர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் பலி
தொண்டாமுத்தூர், ;தண்ணீர் பந்தலில், ரோட்டோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவர், சிகிச்சை பெற்று வருகிறார். சென்னனூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பார்த்திபன், 45, ஹார்டுவேர் கடை வைத்துள்ளார். இவர் நேற்று காலை, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு, தண்ணீர் பந்தல் சிறுவாணி மெயின் ரோட்டின் ஓரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்,35 என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, சிறுவாணி மெயின் ரோட்டில், அதிவேகமாக வந்த ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து, பார்த்திபன், பிரபாகரன் மீது மோதியது. பார்த்திபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரபாகரனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், பார்த்திபன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். படுகாயம் அடைந்த பிரபாகரனை, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து, அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன்,38 என்பவர் மீது, பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.