வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படுவதாக, நல்வாழ்வுத்துறை அமைச்சர் இதயமே இல்லாமல் புளூகுவது எதற்காக.?
பரவாயில்லை ஒருவராவது இருக்கிறார், பல மாவட்டங்களில் ஒருவர் கூட இல்லை என்பது தான் உண்மை...
கோவை : கோவை அரசு மருத்துவ மனை இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவில், ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருப்பதால், அவசர அறுவை சிகிச்சை செய்ய முடியாத சூழல் இருக்கிறது. அரசால் அனுமதிக்கப்பட்ட நான்கு டாக்டர் பணியிடங்களில், காலியிடங்களை விரைந்து நிரப்பி, ஏழை எளிய மக்களுக்கு அறுவை சிகிச்சையை தொடர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில், 7000-9000 பேர் உள், புற நோயாளிகளாக தினமும் சிகிச்சை பெறுகின்றனர். இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட, நான்கு டாக்டர் பணியிடங்களில் ஓரிடம் காலியாக இருந்தது. மீதமுள்ள மூன்று டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்து வந்தனர். 2024 டிச.,ல் மேலும் ஒருவர் இட மாறுதலாகிச் சென்றார். கடந்த மாதம் ஒருவர் பதவி உயர்வு பெற்று, வேறிடத்துக்குச் சென்று விட்டார். தற்போது ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அதனால், தற்போது இதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகளை சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கின்றனர். அரசு மருத்துவமனை நிர்வாக பிரிவில்உள்ள ஒருவர் கூறுகையில், 'நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து, இதய அறுவை சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். கடந்த மாதம் வரை இரண்டு டாக்டர்கள் இருந்ததால், 10 அறுவை சிகிச்சை வரை செய்யப்பட்டது. தற்போது மூன்று டாக்டர் பணியிடம் காலியாக இருப்பதால், மேஜர் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதில்லை' என்றார். அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, ''இதயவியல் துறையில் பணியாற்றிய டாக்டர், பதவி உயர்வு பெற்று வேறிடத்துக்குச் சென்றதால், ஒருவர் மட்டும் உள்ளார். 'ஓபன் ஹார்ட் சர்ஜரி' செய்ய நான்கு டாக்டர்கள் தேவை என்பதால், அதை தவிர மற்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. டாக்டர் பணியிடத்தை நிரப்ப, மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் கூறியுள்ளோம்,'' என்றார். அப்படியானால், அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படுவதாகவும், ஏழைகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதாகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், முதல்வரும் மாறி மாறி சொல்வதில், கொஞ்சூண்டு உண்மை கூட இல்லையா?
அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படுவதாக, நல்வாழ்வுத்துறை அமைச்சர் இதயமே இல்லாமல் புளூகுவது எதற்காக.?
பரவாயில்லை ஒருவராவது இருக்கிறார், பல மாவட்டங்களில் ஒருவர் கூட இல்லை என்பது தான் உண்மை...