வாய்ப்புகளை பயன்படுத்த தயாராக இருப்பவர்களே வெற்றி பெற முடியும்
கோவை: பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 'நான் முதல்வன் - உயர்வுக்கு படி' என்கிற நிகழ்ச்சி, கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார். துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், பல்வேறு காரணங்களால் கல்லுாரியில் சேரமுடியாதவர்கள் மற்றும் பெற்றோர் வந்திருந்தனர். உயர்கல்வியில் சேர்க்கை உறுதி செய்யும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பாரதியார் பல்கலை வழிகாட்டுதல் துறை தலைவர் விமலா பேசியதாவது: தேர்வுகளில் தோல்வி, மதிப்பெண் குறைவு, பொருளாதாரம் இல்லை என எவ்வித காரணங்களும் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். கல்வி ஒன்றே வாழ்க்கையை சிறந்த இடத்துக்கு எடுத்துச்செல்லும். தன்னம்பிக்கையுடன் கல்வியை தொடருங்கள். இடமுள்ள எந்த கல்லுாரியில் சேரவும், உதவ தயாராக உள்ளோம். படிக்கும்போதே பகுதி நேர வேலை செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புகளை பயன்படுத்த தயாராக இருப்பவர்களே வெற்றி பெற முடியும். இவ்வாறு, அவர் பேசினார். மாணவர்களுக்கு உயர் கல்வி சேர்க்கை குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, இந்துஸ்தான் கல்லுாரி அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கருணாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.