பழைய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறப்பு :2ம் போக நெல் சாகுபடிக்கு கைகொடுக்கும்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. அதில், பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 6,400 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவளங்கல், வடக்கலுார், பெரியணை மற்றும் அம்மன் கால்வாய் வழியாக நீர் வினியோகிக்கப்படுகிறது. நடப்பாண்டு, பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதையடுத்து, கடந்த மே மாதம் ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு முதலாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த, 15ம் தேதியுடன் முதல் போக சாகுபடிக்கான நீர் வழங்குவது நிறைவடைந்தது. தொடர்ந்து, இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு நேற்று நீர் திறக்கப்பட்டது. உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல், உதவி பொறியாளர் கோகுல் கார்த்திக் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். அதிகாரிகள் கூறியதாவது: ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட, 6,400 ஏக்கர் நிலங்களுக்கு முதல் போக பாசனத்துக்காக நேற்று முதல், வரும், ஏப். 15ம் தேதி வரை ஆழியாறு அணையில் இருந்து தொடர்ந்து, 173 நாட்களுக்கு, 1,143 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. ஆழியாறு அணையில் தற்போது 118.50 அடி நீர்மட்டம் உள்ளது. 173 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட போதுமான அளவு தண்ணீர் அணையில் இருப்பு உள்ளது. இவ்வாறு, கூறினர்.