மாஸ்டர் பிளானில் திட்ட சாலையை சேர்க்க எதிர்ப்பு
அன்னுார்; 'கோவை மாஸ்டர் பிளான்'ல் சேர்க்கப்பட்ட திட்டச்சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவை-சத்தி பசுமைவழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு, கொங்கு மண்டல விவசாயிகள் நல சங்கம் மற்றும் குடியிருப்பு வாசிகள் சார்பில், கோவை கலெக்டர் பவன் குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: 'கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041' தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் குரும்பபாளையம் துவங்கி, அன்னுார் அருகே உள்ள காரேகவுண்டன் பாளையம் வரை புதிதாக திட்டச்சாலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தி விரிவாக்கம் செய்யலாம் என தெரிவித்துள்ளோம். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கைவிடப்பட்ட பசுமைவழிச் சாலையை தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை கையில் எடுத்து செயல்படுத்த நினைப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது. இந்த மாஸ்டர் பிளான் சம்பந்தமாக கருத்து கேட்பு கூட்டம் கோவையில் நடந்த போது விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கருத்து கேட்கப்படாமலே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எந்த காரணத்தைக் கொண்டும் விவசாய தோட்டங்கள் மற்றும் ஏற்கனவே டி.டி.சி.பி., யால் அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட்களில் புதிய சாலை அமைக்க விடமாட்டோம். எனவே, உடனடியாக கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041ல் இருந்து குரும்பபாளையம் முதல் காரே கவுண்டன் பாளையம் வரை திட்டச் சாலை அமைக்கப்படும் என்று உள்ளதை நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.