கோவை:'ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ்' நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், பயணிக்கு இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, சிங்காநல்லுார் கிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் ரவிக்குமார். தமிழ்நாடு வணிகர் சங்க முதன்மை ஆலோசகரான இவர், 2021, அக்.,30ல், அதிகாலை 5:55 மணிக்கு, பெங்களூரு- டில்லி செல்வதற்காக, இ-டிக்கெட் வாங்கினார்.அதிகாலை பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்றார். பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, விமான நிலைய நுழைவு வாயிலுக்கு சென்ற போது, காலதாமதம் ஏற்பட்டதால் அனுமதிக்க முடியாது என மறுத்து விட்டனர்.விமானம் புறப்படுவதற்கு 1:35 நிமிடத்திற்கு முன்பே சென்றும், அனுமதி மறுக்கப்பட்டதால், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது, ஏற்கனவே புக் செய்த விமான எண் மாற்றப்பட்டு, வேறு விமானம் புறப்படுவதால் நேரம் மாற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.ஆனால், விமான எண் மாற்றப்பட்டது குறித்து, ரவிக்குமாருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், அவரால் டில்லியில் நடைபெற இருந்த வணிகர் சங்க கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.பாதிக்கப்பட்ட ரவிக்குமார், இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.