உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்தில் சிக்கிய லாரிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

விபத்தில் சிக்கிய லாரிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை; விபத்தில் சிக்கிய லாரிக்கு இழப்பீடு தொகை வழங்க, நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை அருகேயுள்ள நீலாம்பூரை சேர்ந்த கார்த்திகேயன், அவருக்கு சொந்தமான சரக்கு லாரிக்கு, சோழமண்டலம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஓராண்டிற்கு காப்பீடு செய்தார். அதற்கான பிரிமியம் தொகை, 20 ஆயிரத்து 199 ரூபாய் செலுத்தினார். இந்நிலையில், 2023, டிச., 8ல், அவிநாசி அருகே சேலம் பைபாஸ் ரோட்டில், லாரி சென்றபோது, பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. லாரி டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.இதையடுத்து, திருமுருகன்பூண்டி போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.லாரி சேதம் அடைந்ததால், அதற்கான இழப்பீடு தொகை, 2.46 லட்சம் ரூபாய் வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தார். டிரைவர் மது அருந்தியதால் விபத்து நடந்ததாக கூறி, காப்பீடு தொகை வழங்க மறுத்தனர்.இதனால் இழப்பீடு வழங்கக் கோரி, கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ''லாரி டிரைவர் மது அருந்தியதால் விபத்து ஏற்பட்டதாக மருத்துவ ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. எனவே மனுதாரருக்கு, காப்பீடு தொகை, 2.46 லட்சம் ரூபாய், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை