கொரோனா பாதித்தவருக்கு ரூ.17 லட்சம் தர உத்தரவு
கோவை : கோவை, கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், 77. இவர், 'ஐசிஐசிஐ - லம்பார்டு' இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்திருந்தார்.ரங்கநாதன், சிங்கப்பூர் சென்றிருந்தபோது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள, 'செங்காங்' மருத்துவமனையில், 2023, டிச., 15ல் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், இருதயம் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. சிகிச்சைக்கு, 17 லட்சம் ரூபாய் மருத்துவக்கட்டணம் செலுத்தினார். அங்கிருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு, கோவை திரும்பினார். மீண்டும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.சிங்கப்பூர், கோவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற மருத்துவக்கட்டணம் வழங்கக்கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார். நிறுவனம் காலதாமதம் செய்தது.விசாரித்தபோது, 'ஏற்கனவே இருதய நோய் பாதிப்பு இருந்ததை மறைத்து இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பதால் உரிமை கோர முடியாது' என, பதிலளிக்கப்பட்டது.'கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகே இருதய பாதிப்பு இருந்தது' என, ரங்கநாதன் கூறியும், மருத்துவ செலவுத்தொகையை நிறுவனம் வழங்கவில்லை. அதனால், சிகிச்சை கட்டணம், இழப்பீடு கேட்டு, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் சிகிச்சை பெற்ற கட்டணம், 17 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளனர்.