அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு; விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
பொள்ளாச்சி; தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கான மேளாவில் விளக்கப்பட்டது.வேளாண்மைத்துறையின், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகள் மேளா பொள்ளாச்சி அருகே குள்ளிச்செட்டிபாளையம் தனியார் மண்டபத்தில் நடந்தது. வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேனி தலைமை வகித்தார்.முன்னதாக, வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து, பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்ட கையேடு புத்தகம் வெளியிடப்பட்டது.முதன்மை விஞ்ஞானி கோமதி, 'அங்கக வேளாண்மை, அங்கக இடுபொருட்கள் தயாரித்தல்' குறித்தும், அங்ககச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து, 'பங்கேற்பு உத்தரவாத அமைப்பின் அங்கக சான்றளிப்பு நடைமுறைகள்' குறித்தும் பேசினர்.இதேபோல, உழவியல் துறை பேராசிரியர் சுரேஷ்குமார், தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து, பூச்சியியல் துறை இணை பேராசிரியர் அருள்பிரகாஷ், தென்னையில் வெள்ளை ஈக்கள் மேலாண்மை மற்றும் வேர் வாடல் நோய் மேலாண்மை குறித்தும், வேளாண் துணை இயக்குனர் மல்லிகா, அங்கக விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் குறித்தும் விளக்கிப்பேசினர்.அட்மா திட்டத் தலைவர்கள் ஜெயபிரகாஷ், ரவிச்சந்திரன், விவசாயி குணசேகரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேளாண் அலுவலர் ஜாக்கிராகானம் நன்றி கூறினார்.