உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அமெரிக்கா விதித்துள்ள வரியை குறைக்க ஓஸ்மா வலியுறுத்தல்

அமெரிக்கா விதித்துள்ள வரியை குறைக்க ஓஸ்மா வலியுறுத்தல்

கோவை:'அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரியை, 15 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஓபன் என்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேசன் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவுக்கான இறக்குமதி வரியை, 25 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியிருப்பது, நமது ஜவுளி ஏற்றுமதியாளர்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஜவுளி ஏற்றுமதியில் போட்டி நாடுகளான வங்கதேசம், வியட்நாம், இந்தோனேஷியா, தாய்லாந்து, இலங்கை, பாகிஸ்தான், துருக்கி, மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்கு, 15 முதல், 20 சதவீதமே அமெரிக்கா இறக்குமதி வரி விதித்துள்ளது. இது அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும். கடந்த இரண்டு ஆண்டுகளில், அமெரிக்காவுக்கான ஜவுளி ஏற்றுமதி ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் என்கிற அளவுக்கு நல்ல வளர்ச்சியை கண்டது. ஓ.இ., மில்கள் நுாலில் இருந்து உற்பத்தியாகும் ஜவுளி பொருட்கள், துண்டு வகைகள், மெத்தை விரிப்பு, சமையலறை விரிப்பு, தரை துடைப்பான், ஜன்னல் திரைச்சீலை, கார்பெட், டி-சர்ட், ஜீன்ஸ் போன்ற ஜவுளி ரகங்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதை நம்பி, நாடு முழுவதுமுள்ள ஓ.இ., மில்கள், நவீனமயமாக்க, கடந்த சில ஆண்டுகளில் மட்டும், 4,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. எனவே, அமெரிக்காவுடன் பேசி, இந்தியாவுக்கான இறக்குமதி வரியை, 15 சதவீதமாக குறைக்க வழிவகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களும், அமெரிக்க நுகர்வோரும் பயனடைவர். இல்லையெனில், ரஷ்யா, ஐரோப்பா நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்திக் கொடுத்தால், இந்திய ஜவுளி ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !