கலர் கலரா பேனா, லஞ்ச் பாக்ஸ் வாங்க கடைவீதிகளில் பெற்றோர் பிஸி
கோவை; கோடை விடுமுறை முடிந்து, வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால், புத்தகப்பை, லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்க, நேற்று கடைகளில் அதிக கூட்டம் காணப்பட்டது.நகரின் முக்கிய கடைகள் மற்றும் மொத்த வியாபார மையங்களில் பென்சில், பேனா, நோட்புக், புத்தக அட்டைகள், ஜியோமெட்ரி பாக்ஸ், உணவு பைகள், வாட்டர் கேன், கால்குலேட்டர்கள் மற்றும் இங்க் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை, ஆர்வமுடன் வாங்கி செல்லும் குழந்தைகளை பார்க்க முடிந்தது.குறிப்பாக, இந்த ஆண்டு புதிதாக அறிமுகமான வாட்டர் பாட்டில்கள், லேபிள்கள், புதிய வடிவமைப்பில் உள்ள பாக்ஸ், கலர் ஸ்கெட்ச் பாக்ஸ் போன்றவை அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.“கடந்த வாரத்துடன் ஒப்பிட்டால், இந்த வாரம் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது,” என்கிறார் ஸ்டேஷனரி கடை உரிமையாளர் ரமேஷ்.மேலும் அவர் கூறுகையில், “கடந்த சில நாட்களாக, மழை காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் தற்போது, கடந்த ஆண்டை போலவே விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு, விற்பனை மேலும் அதிகரிக்கும்,” என்றார்.ஸ்டேஷனரி கடைகளுக்கு மட்டுமல்லாமல், லஞ்ச் பேக், லஞ்ச் பாக்ஸ், ஷூ, சாக்ஸ், மழை கோட் போன்ற பொருட்கள் விற்பனை கடைகளிலும், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல கடைகள் புதிய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. இதனால், கோவையின் பல பகுதிகளில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை தேடித்தேடி வாங்கும் ஆர்வத்தில் உள்ளனர்.