பணம் சம்பாதிக்கும் இலக்குடன் திரியும் அங்கீகாரமற்ற விளையாட்டு சங்கங்கள் பெற்றோர், மாணவர்கள் கவனம்
கோவை : அங்கீகாரம் பெறாமல் புதிதாக முளைத்துவரும் விளையாட்டு சங்கங்களால், சாதனை துடிப்புடன் இருக்கும் வீரர்கள், ஏமாற்றங்களுக்கு ஆளாவதுடன், பணத்தை இழக்கும் பரிதபாமும் காணப்படுகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது, வீரர், வீராங்கனைகளிடம் மறைந்துள்ள திறமையை கண்டறிந்து, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு முன்னேறும் வகையில் பயிற்சி, ஊக்குவிப்பு மற்றும் நிதியுதவி அளித்து வருகிறது.ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்நாடு தடகள சங்கம், ஜிம்னாஸ்டிக் சங்கம், பால் பேட்மின்டன், கூடைப்பந்து, செஸ், சைக்கிள் போலோ, பாராலிம்பிக் விளையாட்டு சங்கம், டென்னிஸ் உட்பட, 38 சங்கங்கள் தமிழகத்தில் வீரர், வீராங்கனைகளை வழிநடத்தி வருகின்றன.வீரர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல, ஆத்மார்த்தமாக செயல்பட்டுவரும் சங்கங்களுக்கு மத்தியில், பணம் சம்பாதிக்கும் நோக்குடன், பல சங்கங்கள் புதிதாக முளைத்து வருகின்றன. அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் வழங்கும் சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் கிடையாது.குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, அவர்களது கனவை நனவாக்கும் வகையில் கடன் வாங்கி பயிற்சி, போட்டிக்காக பணத்தை செலவு செய்யும் பெற்றோரே அதிகம்.தேசிய, சர்வதேச போட்டிகளுக்கு அழைத்து செல்வதாக, வீரர்களிடம் தனித்தொகையை பெற்றுக்கொண்டு, இது போன்ற டுபாக்கூர் சங்கத்தினர் லாபம் பார்க்கின்றனர். எங்களை அணுகலாம்!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:அங்கீகாரம் பெறாத சங்கங்கள் வீரர்,வீராங்கனைகளை தேசிய, சர்வதேச போட்டிகளுக்கு அழைத்து செல்கின்றனர். வெளிநாடுகளுக்கும் பணத்தை செலவழித்து, தங்கள் குழந்தைகளை பெற்றோர் அனுப்பிவைக்கின்றனர். ஆனால், அங்கீகரிக்கப்படாத சங்கங்களின் சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் இல்லை. சில விளையாட்டுகளில், 'ஓபன்' போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால், கல்லுாரி, பல்கலை அளவில் நடக்கும் போட்டிகளில், எந்த பிரிவில் மாணவர்களை அனுப்புவது என்ற கேள்வியும், குழப்பமும் நிலவுகிறது. எனவே, பெற்றோர் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் தொடர்பாக, எங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.விளையாட்டு வீரர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கண்காணிப்பையும், விதிகளையும் கடுமையாக்க வேண்டும்.
உத்தரவாதம் கிடையாது
'அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்கள் தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு வீரர்களை அழைத்து செல்லும்போது, உணவு உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் விதிப்பர்; கண்காணிப்பும் தீவிரமாக இருக்கும்.சில சமயங்களில், துரித உணவு உள்ளிட்டவை சாப்பிட்ட வீரர்கள் உயிரிழப்பு போன்ற செய்திகளை கேட்கமுடிகிறது. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் அழைத்து செல்லும்போது, இதுபோன்ற துரதிர்ஷ்ட சம்பவங்கள் நிகழ்ந்தால், அரசிடம் நிவாரணம் கேட்கலாம். அங்கீகரிக்கப்படாத சங்கங்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது' என்கின்றனர் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள்.