| ADDED : பிப் 23, 2024 10:58 PM
சூலுார்:'ஓட்டு சாவடிகளுக்கு அருகில், 200 மீட்டருக்குள் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.சூலுார் தாலுகா அலுவலகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் தனசேகர், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சேகர் பங்கேற்றனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசி பேசியதாவது:பல தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது என, யாரும் கவனக்குறைவாக இருந்து விட கூடாது. தேர்தல் சமயத்தில், சிறிய பிரச்னை கூட பெரிய பிரச்னையாகி விடும். அனைவரும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். தேர்தல் தேதி அறிவித்தவுடன் உங்கள் பொறுப்பு அதிகமாகி விடும். ஓட்டுச் சாவடிகளில் அனைத்து வசதிகளும் உள்ளனவா என, ஆய்வு செய்ய வேண்டும். பழைய கட்டடமா, புதிய கட்டமாக என, ஆய்வு செய்ய வேண்டும். ஓட்டு சாவடி குறித்த அனைத்து விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். ஓட்டு சாவடியில் இருந்து, 200 மீட்டருக்குள் அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளனவா என, கண்டறிய வேண்டும். அப்படி இருந்தால், உரிய நோட்டீஸ் கொடுத்து, அவற்றை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல் விளக்கம் செய்து காட்ட வேண்டும். பதற்றமான பகுதிகள் எவை என கண்டறிந்து, வைத்திருக்க வேண்டும். அங்கு அடிக்கடி சென்று மக்களுடன் பேசி, ஓட்டுப்பதிவு குறித்து நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.