பராமரிப்பின்றி வீணாகும் பயணியர் நிழற்கூரை
நெகமம்: பொள்ளாச்சி --- பல்லடம் ரோட்டில், நெகமம் அருகே செட்டிகாளிபாளையம் பகுதியில் எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தொகுதி நிதியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூரை சுற்று பகுதி முழுவதும் புதர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இத்துடன் நிழற்கூரை உள்பகுதி பராமரிப்பின்றி தூசு படிந்து உள்ளது. இதனால், பயணியர் உபயோகப்படுத்த முடியாத நிலையில் நிழற்கூரை உள்ளது. மேலும், நிழற்கூரை சுவர் முழுக்க போஸ்டர் ஒட்டும் இடமாக மாறியுள்ளது. பஸ் வரும் வரை மக்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட நிழற்கூரையை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், வீணாகி வருகிறது. ஊராட்சி நிர்வாகம் நிழற்கூரை சுற்றுப்பகுதியில் உள்ள புதரை அகற்றி, சுவரில் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்றி, சுதப்படுத்தி பராமரிக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.