| ADDED : நவ 18, 2025 04:42 AM
கோவை: ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை, பெரும்பாலான வாகனங்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டதால், அவிநாசி சாலையில் 'பீக் ஹவர்ஸ்' சமயத்தில் மட்டும் சற்று வாகன நெரிசல் காணப்படுகிறது. அதே நேரம், சாலை சந்திப்புகளில் பாதசாரிகள் கடப்பதற்கு போதிய வசதிகள் செய்து தராததால், வாகனங்களுக்கு இடையே உயிர் பயத்துடன் கடக்க வேண்டியிருக்கிறது. ரோட்டின் இருபுறமும் பஸ் ஸ்டாப்புகள் இருக்கின்றன. பஸ்களில் வந்திறங்கும் பயணிகள், மறுபுறத்துக்கு செல்ல வழித்தடம் இல்லை. இருந்தாலும், பாதுகாப்பாக கடப்பதற்கு வசதியில்லை. வாகனங்கள் வராத சமயம் பார்த்து, காத்திருந்து கடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவிநாசி சாலையில் வாகனம் கடக்காத சமயம் என ஏதுமில்லை. இவ்வழித்தடத்தில் லட்சுமி மில்ஸ் மிக முக்கியமான சந்திப்பு. திருப்பூர், ஈரோடு, சேலம் நோக்கிச் செல்லும் பஸ்கள், இந்த ஸ்டாப்பில் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்லும். மறுபுறத்துக்கு செல்லவும், அங்கிருந்து வருவதற்கும் மையத்தடுப்புக்கு இடையே உள்ள சிறிய வழியில் பாதசாரிகள் வருகின்றனர். விபத்து அபாயம் ரோட்டை பாதுகாப்பாக கடக்க, 'ஜீப்ரா கிராஸிங்' கோடுகள் வரையவில்லை. பாதசாரிகள் கடக்கும் பகுதி என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில், அறிவிப்பு பலகையும் இல்லை. பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி முன் அமைத்திருப்பதுபோல், 'பெலிக்கன் சிக்னல்' வசதியும் செய்து தரப்படவில்லை. அதனால், பாதசாரிகள் இஷ்டத்துக்கு ரோட்டை 'கிராஸ்' செய்கின்றனர். இது, விபத்துக்கு வழி வகுக்கிறது. குழந்தைகள் மற்றும் லக்கேஜ்களுடன் வரும் மக்கள், ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர். வேகமாக கடக்க முடியாத முதியோரின் பாடுதான் கஷ்டம். அதிவேகமாக வரும் வாகனங்கள், கட்டுப்படுத்த முடியாமல் விபத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அவ்விடத்தில் ரப்பர் வேகத்தடை அமைக்க வேண்டும் அல்லது பெலிக்கன் சிக்னல் வசதி ஏற்படுத்த வேண்டும்.