உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 60 வயதான கைத்தறி நெசவாளர்களுக்கு பென்ஷன் சேவை; மைய துணை இயக்குனர் தகவல்

60 வயதான கைத்தறி நெசவாளர்களுக்கு பென்ஷன் சேவை; மைய துணை இயக்குனர் தகவல்

மேட்டுப்பாளையம்; 60 வயதான கைத்தறி நெசவாளர்களுக்கு, மாதம், 8000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படும், என, மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சக நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் கார்த்திகேயன் பேசினார். சிறுமுகையில், சிறுமுகை கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், தேசிய கைத்தறி தின விழா நடந்தது. விழாவுக்கு மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சக நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் கார்த்திகேயன் தலைமை வகித்து பேசியதாவது: மத்திய அரசு, கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கும் திட்டங்கள் அனைத்தும், நெசவாளர்களுக்கு வழங்கப்படுகிறது. குறைந்தது, 50 பேரும், அதிகபட்சம் 200 பேர், கைத்தறி குழுமம் அமைத்து, அவர்களுக்கு உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். இந்த குழுமங்களுக்கு, 2 கோடி ரூபாய் வரை கைத்தறி நெசவு சம்பந்தமான உபகரணங்கள் வழங்கப்படும். தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்து வருவதால், தற்போது டிசைன் போடுவதில் எலக்ட்ரானிக் ஜக்கார்டு பயன்படுத்த வேண்டும்.அடையாள அட்டை வைத்துள்ள கைத்தறி நெசவு தொழிலாளர் குழந்தைகளுக்கு அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவி தொகை வழங்கப்படும். சிறந்த நெசவாளராக தேர்வு செய்யப்படும் நபருக்கு, 2 லட்சம் ரூபாய் உதவி தொகையும், தாமிர பட்டயம் விருது வழங்கப்படும். 60 வயதுக்கு மேல் உள்ள நெசவாளர்களுக்கு, மாதம், 8,000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் புதிய ரகத்துக்கு, புவிசார் குறியீடு பெறவும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு துணை இயக்குனர் பேசினார். மத்திய அரசு தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழக சீனியர் மேனேஜர் ரத்தினவேல், கைத்தறி கூட்டுறவு சங்க முன்னாள் மேலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பேசினர். விழாவில் திறன்மிகு நெசவாளர்கள், நெசவு சார்ந்த தொழிலாளர்கள், இளைய தலைமுறை நெசவாளர்கள் என மொத்தம், 26 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக சிறுமுகை கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனர் நாகேந்திரன் வரவேற்றார். பிரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி