அஞ்சுகம் நகர் ரோடுகளில் நடப்பதற்கே அஞ்சும் மக்கள்
கோவை; கணபதி அருகே 3வது வார்டு அஞ்சுகம் நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நகரில் ஐந்துக்கு மேற்பட்ட ரோடுகள் மோசமான நிலையில் உள்ளதால், மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். நேற்று முன்தினம் பெய்த மழைக்கு, குண்டும் குழியுமாக இருந்த ரோட்டில் தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகள் சைக்கிளில் செல்ல முடியாமல், தள்ளிச் செல்லும் அவலம் காணப்படுகிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அஞ்சுகம் நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, நான்கு 'கட்' ரோடுகளில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணி முடிந்ததும், தார் ரோடு அமைக்கப்படும். இதர ரோடுகளுக்கும் நிதி வந்தவுடன் போடப்படும்' என்றார்.