குடிநீருடன் கழிவுநீர் கலப்பு மக்கள் சாலை மறியல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி ஊராட்சியில், குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாகக் கூறி அப்பகுதி மக்கள், வால்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அதிகப்படியான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு வீடுகளுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வகையில், நேற்று முன்தினம், குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அப்போது, திடீரென, 10 வது வார்டு மக்கள் ஒன்று திரண்டு, பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான பிரதான ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து, தகவல் அறிந்து ஆழியார் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு நடத்தி, 'குடிநீரில், கழிவுநீர் கலந்தது குறித்து விசாரிக்கப்படும்; சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்க ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும்,' என, உறுதியளித்தனர்.இதையடுத்து, மக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரணமாக, அவ்வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.