வால்பாறை - சாலக்குடி இடையே பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
வால்பாறை; வால்பாறை -- சாலக்குடி இடையே மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும், என, இருமாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில் இருந்து, மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக, கேரள மாநிலம் சாலக்குடிக்கு அரசு மற்றும் தனியார் பஸ் இயக்கப்படுகிறது.இது தவிர, சாலக்குடியில் இருந்து மளுக்கப்பாறை வரை, நாள் தோறும் ஐந்து முறை கேரள அரசு பஸ் இயக்கப்படுகிறது. வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி வழியாக சாலக்குடிக்கு, இரண்டு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பல ஆண்டுகளாக சாலக்குடிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ், கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இருமாநில மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் அதிகளவில் சாலக்குடி வழித்தடத்தில் உள்ள அதிரப்பள்ளி, சார்பா நீர்வீழ்ச்சிகளை காண செல்கின்றனர். இதுதவிர, கேரளாவை சேர்ந்த மக்கள் அதிகளவில் வால்பாறையில் வசிக்கின்றனர்.எனவே, இருமாநில மக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் வசதிக்காக வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், சாலக்குடிக்கு மீண்டும் பஸ் இயக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.