பஸ் டைமிங் மாற்ற மக்கள் வலியுறுத்தல்
உடுமலை ;உடுமலையில் இருந்து, பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம் வழியாக அடிவள்ளி கிராமத்துக்கு (வழித்தட எண் 31) பஸ் நீண்ட காலமாக இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பின், இந்த பஸ் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் சார்பில், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினர்.இதையடுத்து, காலை 5:35 மணிக்கு உடுமலையில் இருந்து கிளம்பும் ஒரு 'டிரிப்' மட்டும் பஸ் இயக்கப்படுகிறது. இந்த டிரிப்பிலும், பயணியர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக, போக்குவரத்து கழகத்தினரால் தெரிவிக்கப்படுகிறது.மக்கள் கூறுகையில், 'உடுமலையில் இருந்து, காலை, 7:15 மணிக்கு கிளம்பி, பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம் வழியாக அடிவள்ளிக்கு வரும் வகையில், பஸ்சின் பயண நேரத்தை மாற்ற வேண்டும். இதனால், காலை நேரத்தில், கிராமங்களில் இருந்து உடுமலை அரசு கலைக்கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.