அனுமதி இன்றி மரத்தை வெட்ட மக்கள் எதிர்ப்பு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தேவரடிபாளையம் செல்லும் ரோட்டின் ஓரம் உள்ள பெரிய அளவிலான, இரண்டு இலுப்பை மரங்கள் உள்ளன. இந்த மரத்தை வெட்டுவதற்காக, மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் உபகரணங்களுடன் பைக்கில் சிலர் வந்தனர். இது பற்றி அவர்களிடம் பொதுமக்கள் கேட்டபோது, திருவாடுதுறையில் உள்ள கோவிலுக்கு தேர் செய்ய மரம் வெட்ட வந்ததாகவும், அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறப்பட்டதாகவும் கூறினர். ஆனால் அவர்களிடம், மரத்தினை வெட்ட உரிய ஆவணங்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்ட மக்கள், அவர்களை மரம் வெட்ட விடாமல் தடுத்து நிறுத்தியதால், அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, 'மரம் வெட்டுவதற்கு அனுமதி எதுவும் வருவாய்த் துறை தரப்பில் வழங்கவில்லை. அனுமதி இன்றி மரத்தை வெட்டினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.