உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடுமையான தண்டனை வழங்கினால் தான் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்

கடுமையான தண்டனை வழங்கினால் தான் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்

கோவையில் கல்லுாரி மாணவியை நள்ளிரவில், மூன்று பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கோவையில் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு எத்தகைய தண்டனை வழங்க வேண்டும் என்பது குறித்து கோவை புறநகர் மக்களிடம் பேசினோம். 'கடும் நடவடிக்கை' பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை விரைவாக சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்று தர வேண்டும். இதற்கு ஏற்ப பாலியல் குற்றங்களை மட்டுமே விரைவாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும். இதற்கான சிறப்பு நடைமுறைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும். -சகாதேவன், பெரியநாயக்கன்பாளையம் .'விரைவான விசாரணை' கல்லுாரி மாணவியிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த செயல் மீண்டும் நடைபெறாத அளவுக்கு விரைவாக விசாரணை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொள்ள வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். -ரவீந்திரன், அன்னூர்.'உடனடி கைது' குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். மது, போதைப்பொருள் கலாசாரத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை பள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும். -ஜெனிபர் பிரவீனா, காரமடை.'தமிழகமே அதிர்ச்சி' இச்சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் உள்ளது. போலீசார் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும். இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க போலீசார் ரோந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். போலீசாரின் கடுமையான நடவடிக்கையினால் மட்டுமே இத்தகைய குற்றச் செயல்களை தடுக்க முடியும். -தமிழரசி, தண்ணீர் பந்தல்.'சமூக விரோதிகளுக்கு பாடம்' கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை இனி யாருக்கும், எங்கும் நடக்கக்கூடாது. அந்த கயவர்களுக்கு வாழ்நாளில் கண்டிராத தண்டனை கொடுக்க வேண்டும். அது மற்ற சமூக விரோதிகளுக்கு பாடமாக இருக்கும்படியாக போலீசாரின் நடவடிக்கை இருக்க வேண்டும். பெற்றோரும் பெண்களின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். -சதீஷ்குமார், கணியூர்.'போதைகளுக்கு அடிமை' புகையிலை போதை, மது போதை என பல்வேறு போதைகளுக்கு இளைய சமுதாயம் அடிமையாகி வருகிறது. போதைக்கு அடிமையான பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தவறான காரியங்களில் ஈடுபடுகின்றனர். இளைஞர்களை நல்வழிப்படுத்த நீதி போதனை அவசியம். பள்ளி, கல்லூரிகளில் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களை சகோதரியாக, தாயாக பார்க்கும் மனோபாவத்தை இளைஞர்களிடம் வளர்க்க வேண்டும். -கார்த்திகேயணி, அன்னூர்.'தீவிர பாதுகாப்பு' கோவை போன்று பாதுகாப்பான நகரம் இல்லை என நினைத்து கொண்டிருந்தது தவறாகிவிட்டது. பெண்கள், குழந்தைகள் மீதான வன் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கோவையில் கல்லூரி மாணவி சீரழித்த மிருகங்களை கண்டுபிடித்து தக்க தண்டணை அளிக்க வேண்டும். போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு அளிக்க வேண்டும். -சிவக்குமார், பொன்னாண்டாம்பாளையம்.'சட்டத்தின் மீது நம்பிக்கை' இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெண்கள் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு உரிய தண்டனையை விரைவில் வழங்கினால் மட்டுமே சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இத்தகைய நபர்களை காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். -சாந்தினி, பெரியநாயக்கன்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ