உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; இன்று யாகசாலை பூஜை துவக்கம்

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; இன்று யாகசாலை பூஜை துவக்கம்

தொண்டாமுத்துார்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை இன்று துவங்குகிறது.கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும், 10ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கிறது. இக்கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாலாலயம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கோவில் திருப்பணிகள் மற்றும் 49 வேதிகை மற்றும் 60 குண்டங்களுடன் யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி நடந்தது. தொடர்ந்து, கடந்த, 4ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று, காலை, அஷ்ட மூர்த்தி ஹோமமும், ஸம்ஹிதா ஹோமமும் நடந்தது. மாலையில், புனித மண் எடுத்தலும் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு, அக்னி ஸங்க்ரஹணம், புனித தீர்த்தம் அழைத்தல், பரிவார மூர்த்திகள் கலசங்கள் யாகசாலைக்கு எழுந்தருளுதல் நடக்கிறது. அதன்பின், மாலை, 4:30 மணிக்கு, மங்கல இசை, விநாயகர் பூஜை, முளைப்பாலிகை இடுதல், பிரதான தெய்வங்களான பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், பால தண்டபாணி கலாகரிஷனம் நடக்கிறது. தொடர்ந்து, பிரதான கலசங்கள் மற்றும் யாகசாலையில், 96 வகையான மூலிகை திரவியங்கள் தெளிக்கப்படும். பல தலங்களில் இருந்து வரும் ஓதுவாமூர்த்திகள், பன்னிரு திருமுறை விண்ணப்பம் செய்கின்றனர். இரவு, 9:00 மணிக்கு, பூர்ணாகுதி, தீபாராதனையுடன் முதல் கால வேள்வி பூஜை முடிவடையும். தொடர்ந்து நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜை நடக்கிறது. வரும், 10ம் தேதி, காலை, 9:50 மணி முதல் 10:05 மணி வரை, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதிகாரிகள் ஆய்வு

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்தின்போது, புனித நீர் கலசங்களை, ராஜகோபுரம் மற்றும் சன்னதிகளின் கோபுரங்களுக்கு எடுத்து செல்வதற்கும், கோவிலின் மேல் தளத்தில் பக்தர்கள் நின்று கும்பாபிஷேகத்தை பார்வையிடவும் ஏதுவாக, 7 இடங்களில், தற்காலிக இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் மேல் தளத்தில், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரும்பு படிக்கட்டுகள், உறுதியாக அமைக்கப்பட்டுள்ளதா, கோவில் மேல்தளத்தில், எத்தனை பேர் வரை அனுமதிக்கலாம் என்பது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், பொதுப்பணித்துறை (கட்டடம்) செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் மோகன கிருஷ்ணன், உதவி பொறியாளர் ஜெயம்கொண்டான், அறநிலையத்துறை உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில், கட்டடத்தின் கட்டுமானம் உறுதியாக உள்ளதால், மேல் தளத்தில் ஆயிரம் பேர் வரை அனுமதிக்கலாம் எனவும், இரும்பு படிக்கட்டுகள் மற்றும் இரும்பு தடுப்புகளை மேலும் வலுப்படுத்த கூடுதல் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ