துவரையில் பூச்சி மேலாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி
மேட்டுப்பாளையம்; தமிழக அரசு வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் சார்பாக, காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில், துவரையில் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் வாயிலாக பயிற்சி வகுப்பு நடந்தது.இந்த பயிற்சியில், விவேகானந்தபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சுரேஷ் குமார் கலந்து கொண்டு, துவரையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் உர மேலாண்மை, நீர் மேலாண்மை, பூச்சி கட்டுப்பாடு ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.காரமடை வட்டார மேலாண்மை அலுவலர் சரண்யா, துவரையில், தரமான விதை நேர்த்தி தொழில்நுட்பங்கள் பற்றி கூறுகையில், ''பயறு வகைகளில், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வாயிலாக, பூச்சிகளை கட்டுப்படுத்துவதால், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து செலவு மற்றும் அதன் வாயிலாக சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் தடுக்கலாம். விளக்கு பொறி, இனக்கவர்ச்சி பொறி, வரப்பு பயிர்களில் ஆமணக்கு பயிர் இடுவதன் வாயிலாக பயிர் வகை பயிர்களை தாக்கக்கூடிய பூச்சிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்,'' என்றார்.காருண்யா பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரி மாணவர்கள், தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்பாடு மற்றும் துவரையில் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு எவ்வாறு செய்வது என்பது பற்றி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா · திட்டத்தைச் சேர்ந்த உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஆர். தினேஷ் குமார், டி. தினேஷ் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.----