| ADDED : பிப் 22, 2024 05:07 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடல் அருகே ரோடு திரும்பும் இடத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது.பொள்ளாச்சி, ராஜாமில் ரோடு, திருவள்ளுவர் திடல் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.திருவள்ளுவர் திடலில் மக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் பகுதி அருகே, ரோடு திரும்பும் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக துார்வாரப்படாமல் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால், கழிவுநீர் தேங்கி சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:திருவள்ளுவர் திடலில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக துார்வாரப்படாமல் உள்ளன. அதில், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு குவிந்து முறையாக நீர் செல்லாமல் தேங்கியுள்ளது.இதனால், கொசுத்தொல்லை அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.கடும் துர்நாற்றம் வீசுவதால், பஸ்சுக்காக காத்திருப்போர் அவதிக்குள்ளாகின்றனர்.கால்வாய்களை துார்வாராதது ஒரு காரணம் என்றாலும், வீடு, கடைகளில் கழிவுகளை தனியாக எடுத்து வைத்து, துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பதில்லை. கழிவுகளை சாக்கடை கால்வாய்களில் வீசிச் செல்வதே இதற்கு காரணம்.இதனால், அவை தேங்கி கிடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.கழிவுகளை துார்வாருவதுடன், கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவு வீசிச் செல்வதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.