பிளஸ் 1 விடைத்தாள்கள் திருத்தும் பணி துவக்கம்
மார்ச், 5ம் தேதி, பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது. மாவட்டத்தில், 94 மையங்களில், 26 ஆயிரத்து, 654 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். கடந்த மார்ச், 27ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைந்தது. ஒவ்வொரு தேர்வு முடிந்ததும், முதன்மை கண்காணிப்பாளர்கள், போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு எடுத்துச்சென்றனர்.திருப்பூர் கல்வி மாவட்டத்தில் கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா பள்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் கல்வி மாவட்டத்தில் பொன்னு மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.நேற்றுமுன்தினம் தேர்வுத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கின. முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வாளர் பணியை தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் முதுகலை ஆசிரியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொண்டனர்.முன்னதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். கடந்த 4ம் தேதி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. வரும், 17ம் தேதியுடன் இப்பணி நிறைவு பெறுகிறது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 9 மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வரும் மே, 19ம் தேதி வெளியாகின்றன. - நமது நிருபர் -