பிளஸ் 2 மறுமதிப்பீடு பணிகள் நிறைவு
கோவை,; கோவை கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுமதிப்பீடு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.நடப்பு கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் விடைத்தாள் நகலை பெற்று, சரிபார்த்த பிறகே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், கடந்த 17ம் தேதி முடிவடைந்தது.இதையடுத்து, கோவையில் மறுமதிப்பீடு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, சர்வஜனா மற்றும் அவிலா கான்வென்ட் ஆகிய இரண்டு பள்ளிகளில் நடைபெற்றன. இதில், சர்வஜனாவில் 650 விடைத்தாள்கள் மற்றும் அவிலா கான்வென்டில் 710 விடைத்தாள்கள் மறுமதிப்பீடு, ஸ்கேன் முடிந்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், தங்களது விடைத்தாள் நகலுக்காக வரும் 24 வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.