| ADDED : டிச 10, 2025 07:07 AM
கோவை: கோவையில் செயல்பட்டு வரும், 'பாரதி பாசறை அறக்கட்டளை' சார்பில், ஆண்டு தோறும் பாரதி படைப்புகளில் ஆளுமை படைத்த ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு பாரதி பிறந்தநாளில் பாரதி விருது வழங்கி கவுரவப்படுத்தப்படுகிறது. பாரதியின், 143வது பிறந்த நாளை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான பாரதி விருது, வானம்பாடி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா, நாளை (11ம் தேதி) மாலை, 6:30 மணிக்கு, ராம்நகர், -சபர்பன் பள்ளி வளாகத்தில் உள்ள மகாகவி சுப்ரமணிய பாரதியார் அரங்கத்தில் நடக்கிறது. பாரதி விருதை, பாரதி பாசறை அறக்கட்டளை அறங்காவலர் ரமணி சங்கர் வழங்க, கவிஞர் சிற்பி பெற்றுக்கொள்கிறார். திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் வாழ்த்துரையும், பாரதி பாசறை தலைவர் மோகன் சங்கர், செயலாளர் ஜான் பீட்டர் ஆகியோர் கருத்துரையும் வழங்க உள்ளனர். சபர்பன் பள்ளி மாணவ, மாணவியரின் பாரதி பாடல்கள் பாடும் இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.